இலங்கையில் சுகாதார துவாய்களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவது தொடர்பாக ‘பேட்மேன்‘ (PAD MAN) என அழைக்கப்படும் இந்திய தொழில் முயற்சியாளர் அருணாசலம் முருகநாதனுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரேமநாத் தொலவத்த, ரோஹினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இலங்கையில் அண்மைய காலமாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

“இலங்கையில் சுகாதார துவாய்களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு தாம் இந்தியாவின் சுகாதார துவாய் தாயரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.

இது இலங்கையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் இது எங்கள் கலாசார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படவில்லை” என்று அமைச்சர் கூறினார்.

பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார துவாய்களை வாங்க முடியாததால் அவர்கள் பாடசாலைக்கு செல்வதைத் தவிர்ப்பதாக வெளியான செய்திகள் கவலையளிப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார்.