கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் கீழ் உள்ள இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மருந்தாளர் இன்மையால் வைத்தியாசலைக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெளிநோயாளர் பிரிவில் தினமும் 400 மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் ஒருவாரத்திற்கு 2500 க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சேவை நாடி வருகின்றனர்.
வாரத்தில் இரு நாட்கள் கிளினிக் நோயாளர்கள் 600 க்கு மேற்பட்டவர்கள் மருந்தெடுக்க வருகின்றனர்.
இந்நிலையில் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய மருந்தாளர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதிலீடு இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை வைத்தியசாலைக்கு என தனியான ஒரு மருந்தாளர் நியமிக்கப்படாத நிலையில் அங்கு கடமையாற்றும் சிற்றூழியர்களைக் கொண்டு நோயாளர்களுக்கான மருந்து வழங்கும் அவலநிலை தொடர்கிறது.
அண்மையில் நோயாளர் ஒருவருக்கு சிற்றூழியர் மருந்தினை முறையற்ற விதத்தில் வழங்கி அதனை உட்கொண்ட நபர் உயிர் ஆபத்தான நிலையில் சிகைச்சை பெற்று வந்த துயரச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும் அங்கு கடமையாற்றிய பல் வைத்தியர் (Dentist), மருத்துவ ஆய்வுகூட உதவியாளர் (MLT Technician) கூட பதிலீடு இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பதிலீடற்ற இடமாற்றங்களால் மருத்துவ சேவை நாடிவரும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரித்த போக்குவரத்து செலவு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் தூர பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு செல்வதில் அதிகமான சிரமங்களையும் செலவீனங்களையும் சந்திக்கின்றனர்.
இறக்காமம் பிரதேசமானது 25000 க்கும் மேற்பட்ட 15 கிராமங்களை உள்ளடக்கிய மூவின மக்கள் வாழும் ஏனைய நகரங்களில் இருந்து தூரப்பட்ட தனிமைப்பட்ட பிரதேசமாகும். இங்கு வாழும் மக்கள் அவர்களுக்கான சுகாதார வைத்திய சேவையை இறக்காமம் பிரதேச வைத்தியசாலை மட்டுமே நம்பியுள்ளனர்.
எனவே இந்த மக்களின் அவலநிலையை கருத்திற்கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகள் எடுக்காமை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments